Monday, September 04, 2006

தாய்மனமும் சேய்மனமும்

சிறகிருக்கிறது
என்னைப் பறக்க விடு
என்பது பிள்ளை மனம்.

சிறு பிள்ளை நீ
என் இறகுக்குள் ஒளிந்து கொள்
என்பது பெற்ற மனம்.

புரியாமல் பறந்தோடும்
பிள்ளை மனம்
புரியும் போது
அதுவும் பெற்ற மனம்.

சந்திரவதனா
யேர்மனி
11.6.1999

விடுதலை வேண்டி.!

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களுக்கு
என் நாசித்துவாரமும்
பாதையாகிப் போனதில்
தொண்டைக்குழி வரை
மசமசத்தது

விடுப்புப் பார்ப்பதே
வேலையாக இருந்ததில்
விழிகளும் சிவந்தன

“அக்கா!
சித்திரைக்குப் பொங்கியாச்சே?”

பாதையில் ஒரு தமிழன்
பாசமாய் கேட்டான்

„...ம்ம்ம்...“
காலைப் பரபரப்பில்
பாணைக் கடிக்கவே
மறந்தேன் என்றால்
நம்புவானா...!

பாதி இரவில் விழித்திருந்து
ஊரில் வாழும் உறவுக்காய்
அழுதேன் என்றால்
நம்புவானா...!

கற்தரையில் எம்மவர்
நித்திரை கொள்வதை
ஊர்க்கடிதம்
சொன்னதில் தொடங்கி

இந்திய வல்லூறுகள்
எம்மவரை
உயிர் வதம் செய்வதில்
தொடர்ந்து

செம்மணிப் புதைகுழியில்
எம் பெண்மணிகள்
புதைந்தது வரை

துரையப்பா விளையாட்டரங்கிலும்
புதை குழிகள்
தொடர்வது வரை

சத்தியமாக நான்
சித்திரைக்கு
பொங்கவில்லை என்றால்
நம்புவானா...!

„ஓம் தம்பி பொங்கியாச்சு „

என் பொய்யில்
முகம் மலர்ந்து
முன்னேறிப் போறவனும்
மூக்கைத்தான் தேய்க்கிறான்
கண்களையும் கசக்குகிறான்

அழகிய மலர்களின்
நுண்ணிய மகரந்தக்களுக்கு
இவன் மூக்கும் பலிதானோ.....!

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களிடமிருந்தாவது
அந்நிய மண்ணில்
அடைக்கலம் தேடும்
எங்கள்
மூக்குகளுக்கும் கண்களுக்கும்
விடுதலை வேண்டுமென
இயற்கையை வேண்டிநின்றேன்.

சந்திரவதனா
யேர்மனி

April-2000
பிரசுரம்- எரிமலை May-2000

அப்பா

"நான் தமிழன்"
மார் தட்டிச் சொன்னாய்

"மமே கொட்டியா"
புத்தன் வழி வந்தவர்கள்
மத்தியில் சொல்லி
எத்தனை இன்னல்கள் பட்டாய்

58இல் தமிழன் அடிபட்டதிலிருந்தே
இரத்தம் கொதிக்க
கொழும்பு மோகம் கொண்டவர் மீது
கோபப் பட்டாய்

கொழுந்து விட்ட உன் கோபத் தீயில்
வளர்ந்து விட்ட உன் பிள்ளைகள்
உணர்வு கொண்டெழுந்து
விடுதலை வேட்கையுடன்
களம் புகுந்த போது
பாசத்தில் நெஞ்சு வெந்தாலும்
தேசத்தை எண்ணிப் பேசாதிருந்தாய்
புத்திரரின் வீரத்தை எண்ணி
பூரித்தும் இருந்தாய்

தாண்டிக்குளம் தாண்டும்
விதியொன்று வந்த போது
மீண்டும் ஊர் திரும்பும் நம்பிக்கையோடு
தாண்டினாய்
கொழும்பு வசதி பிடிக்காது
வவுனியாவிலே தஞ்சம் கொண்டாய்

வருத்தமுற்ற போது
வைத்தியம் செய்ய
போதிய மருத்துவர் இன்றி
எல்லாத் தமிழரையும் போல்
அடிபட்டும் போனாய்

வலிந்த
என்னைச் சுமந்த உன் தோள்கள்
வலுவிழந்து..
கால்கள் நடை தளர்ந்து...

களத்தில் இரு புத்திரரையும்
புலத்தில் மறு பிள்ளைகளையும்
தொலைத்து விட்டு
எங்கோ அந்தகாரத்துக்குள்
பிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடி
களைத்த உன் விழிகள்
பன்னிரண்டு வருடங்கள் கழித்து
என் முகம் பார்த்ததும்
கொட்டும் அருவியாகி
எனை நனைத்த போது
உனை அணைத்துத் தாயானேன்
எனை நனைத்த அக்கணத்தை
உயிருள்ளவரை மறவேன்.

சந்திரவதனா
1.12.1999

தத்துவம்

"உன்னைக் கொடு
என்னைத் தருவேன்"
காதலிக்கையில்

"உன்னைக் கட்ட
என்ன தருவாய்"
கல்யாணத்தில்

"உன்னைக் கட்டி
என்ன கண்டேன்"
தொடரும் வாழ்வில்

சந்திரவதனா
யேர்மனி

இலவு காத்த கிளியாக...!

பனியது பெய்யும்
அழகினைக் கண்டு
மனமது துள்ளும்

வெளியினில் சென்றால்
பனியது பெய்யும்
குளிரது அறைய
உடலது நடுங்கும்
உதிரமும் உறையும்

பனியது பெய்யும்
குளிரது அறைய
பனியது பூவாய்
மரங்களில் தெரியும்

அழகினை ரசிக்க
அவகாசமின்றி
பணமது தேடி
வேலைக்காய் கால்கள்
பனியினில் விரையும்

"குளிரிலும் பனியிலும்
பணமது தேடி..........!
இது என்ன வாழ்க்கை"
மனம் தினம் அலுக்கும்

மடியினில் சுமந்த
மகவுடன் குலாவ
மணியின்றி
மனமது துவழும்

வெயிலதன் வரவில்
பனியது ஓடும்
மரமது துளிர்க்க
மனமது மலரும்
மலர்களும் சிரிக்கும்

மாறும் மாறும் ......!
எல்லாம் மாறும்!
பணமது தேடும்
நிலையது மாறும்!
ஓய்வாய் உட்கார்ந்து
கதைக்க முடியும்
ஒன்றாய் சேர்ந்து
உண்ண முடியும்
விரும்பிய மட்டும்
உறங்க முடியும்
குழந்தைகளுடனே
குலாவ முடியும்
குடும்பமாய் கூடி
களிக்க முடியும் ...!

முடியும் ...! முடியும்...!
பட்டியல் நீளும்!
...முடியும் ...! முடியும்..!
எல்லாம் முடியும்...!

இலவாய் நினைவுகள்
காய்த்துக் குலுங்க
கிளியாய் மனமும்
காத்து நிற்கும்.

சந்திரவதனா
யேர்மனி
1999

எம்மவர் மட்டும் எங்கே...?

பனியின்றி குளிரின்றி
இந்த வருடத்தின் முதல் சிரிப்பு

இயற்கையின் சிரிப்பில்
துளிர்ப்பது மரம் மட்டுந்தானா..!
மலர்வது மலர் மட்டுந்தானா..!
மனிதர்களுந்தான்..!

நகரமே சிரித்தது
யேர்மனியின் அந்த நகரமே சிரித்தது
சிரித்துக் களித்தது
இயற்கையும் சிரிக்க மனிதரும் சிரிக்க
மலராய்த் தெரிந்தது

குட்டைப் பாவாடைகளும்
கட்டை ரீசேர்ட்டுகளும்
தலை காட்டா விட்டாலும்
சிட்டுக் குருவிகளாய் இளசுகள்
உதட்டோடு உதடுரசி
மூக்கோடு மூக்குரசி
கெஞ்சலும் கொஞ்சலுமாய்.....

வட்ட மேசைகளைச் சுற்றி
வட்ட மிட்ட கதிரைகளில்
பெரிசுகளும் சிறிசுகளும்
கண் பார்த்துக் கதை பேசி
மெல்லுதட்டில் தமை மறந்து
ஐஸ் சுவைத்து......
கை கோர்த்து நடக்கையிலும்
காதலுடன் இடை தழுவி
உடல் உரசி
மனம் சிலிர்க்க மலர் பரிமாறி....

இயற்கையோடு இயற்கையாக
சிரித்து... சிலிர்த்து...
ஊரே களித்திருக்கையில்
இந்நகரில் வாழும் இருபது தமிழரில்
ஒருவரையும் காணோமே...!

வன்னியும் வாகரையும்
மனத் திரையில் ஓட
எங்கேயும்
பிற்சேரியாவிலும் ரெஸ்ரோறண்டிலும்
கனவுகளைக் கழுவிக் கொண்டிருக்கிறார்களோ?

சந்திரவதனா
3.4.1999

ஓ... இதுதான் காதலா !

அன்பே!
உனக்கும் எனக்கும் என்ன சொந்தம்
உன்னோடு எனக்கென்ன பந்தம்

அலைஅலையாய் உன் நினைவு வந்து
என் மனமலையில் மோதுகையில்
சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன்
ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்.

தொலை தூரம் நீ வாழ்ந்தாலும்
உன் நினைவுகளோடுதான் நான்
தினம் வாழ்கிறேன்.

குளிரிலே இதமான போர்வையாய்
வியர்க்கையில் குளிர் தென்றலாய்
மழையிலே ஒரு குடையாய்
வெயிலிலே நிழல் தரு மரமாய்
தனிமையில் கூடவே துணையாய்
கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்.....
உன் நினைவுகள் எப்போதும்
என்னோடுதான்

ஓ... இது தான் காதலா!
இது காதலெனும் பந்தத்தில்
வந்த சொந்தமா?
உனக்கு ஒன்று தெரியுமா?
திருமணத்திலும்
உடல் இணைவதிலும்தான்
காதல் வாழுமென்றில்லை
அன்பு நூலின் அதிசயப் பிணைப்பில்
நெஞ்சில் வாழ்வதும் காதல்

நினைவுகளின் தொடுகையிலே
உயிர்ப் பூக்கள் சிலிர்க்கின்ற
என் மனமென்னும் தோட்டத்தில்
உனக்காகத் துளிர்த்த காதல்

இன்று எனக்குள்ளே
விருட்சமாய் வியாபித்து
பூக்களாய் பூத்துக் குலுங்கி
அழகாய்
கனி தரும் இனிமையாய்

இது நீளமான காலத்தின்
வேகமான ஓட்டத்திலும்
அன்பு வேரின் ஆழமான ஊன்றலில்
நின்று வாழும் உண்மைக்காதல்

சந்திரவதனா
யேர்மனி
February-1999

சுதந்திரம்

நாற்பத்தெட்டில்
மாசி நான்காம் நாளில்
நமக்குச் சுதந்திரமாம்

படித்து
பரீட்சை எழுதி
புள்ளிகளும் பெற்றோம்

ஐம்பத்தெட்டில் தமிழன்
அடிபட்டானாம்
கண்களில் அனல் கக்க
அப்பா கதையாகச் சொன்னார்

குருவி போல்ச் சேர்த்த பணத்தில்
குதூகலமாய் தொட்டில் வாங்கி
மகப் பேற்றுக்காய்
வடக்கே சென்ற அம்மாவின்
வரவுக்காய் காத்திருக்கையில்...

அக்கினியில் அத்தொட்டில்
கருகுவதைப் பார்த்தாராம்
மலவாளி தலையில் கவிட்டு
மாமா நடப்பதைப் பார்த்தாராம்
ரயரோடு ஒரு தமிழன்
எரிவதைப் பார்த்தாராம்
இன்னும் அவலங்கள்.....!
எத்தனையோ பார்த்தாராம்

இவையெல்லாம் கதையாக
கொடுங் கதையாக
எனக்குள்ளே பதிந்தாலும்
போன கதைதானே....!
புழுங்காமல் இருந்தேன்

சுதந்திரம் அது என்ன?
புரியாமல் வாழ்ந்தேன்

எண்பத்தி மூன்று ஆடியின்
வெலிக்கடை ஓலத்தில்
சுதந்திரம்!
அது வேண்டும்
எமக்கென
நிரந்தர இடம் வேண்டும்
புரிந்தாலும்.....!
சுயநலம் அது கொண்டு
வெளிநாடு ஓடி வந்தேன்
அந்நியன் மண்ணிலே
அகதி முகாமிலே
வயிற்றுக்காய்......
கன்ரீனில் வரிசையிலும்
காசுக்காய்.....
சோசலிலே கதிரைகளிலும்
மானத்தை விற்று
வேலைக்காய்.....
கால் கடுக்க வீதிகளிலும்
வெள்ளையனின் வாசல்களிலும்
வெட்கத்தை விசிறி
என்னத்தைக் கண்டோம்!
சுதந்திரம் அது என்ன?
மறந்து போச்சு எமக்கு

வேலை கிடைத்தும்
வீடு கிடைத்தும்
விசா கிடைத்தும்
ஈடு கொடுக்க முடியவில்லை
அந்நிய தேச வாழ்க்கைக்கு

ஊரின் அவலங்கள்
உலுக்கும் சேதியாய்
நெஞ்சைக் குடைகையிலும்
வேறு வழியின்றி
ஓடிச் செல்கின்றோம்
அந்நியனின் கீழ்
அடிமையாய் வேலை செய்ய

சுமைகளாய் சோகங்கள்
தொடர்களாய் வேலைகள்
சுதந்திரம் அது வாங்க
ஏணி எங்கே?
தேடுகின்றோம்.

சந்திரவதனா
ஜேர்மனி
4.2.1998