Thursday, September 14, 2006

விசும்பல்

வானம் சிரித்திருந்தது
வண்ணப் பூக்களும் பூத்திருந்தன
தண்ணென்ற காற்று ஒவ்வொருவரையும்
தழுவிச் சென்றது.

பன்னிரண்டு பெண்கள்
வேலை செய்யும்
அந்த அலுவலக அறை மட்டும்
ஏனோ மௌனித்திருந்தது.

"இளவரசி டயானேவே இம்சைப் பட்டாளே"
பெண் படும் பாடுக்காய்
கண் கலங்கும்
சொன்யாவும் மௌனம்.

விண்வெளி தாண்டி
சந்திரனைத் தொட்ட Charles Contrad கூட
வீதி(விபத்திலே)யிலே மாண்டானே!
விதி பற்றி விவாதிக்கும்
வரோனிக்காவும் மௌனம்.

மனதால் தினம் தினம்
மணாளனை விவாகரத்துச் செய்து
சதா அவனைக் திட்டிக் கொட்டும்
மெலிசாவும் மௌனம்

கண்ட கண்ட
பகிடியெல்லாம் சொல்லி கழுத்தறுக்கும்
எறீனாவின் விசும்பல் மட்டும்
இடைவிடாது கேட்டது

நாளை மறுநாள்
அவள் மார்பகத்தை
எடுத்து விடப் போகிறார்கள்.
அவளுக்கு மார்பகப் புற்றுநோய்.

சந்திரவதனா
யேர்மனி
16.4.2000