பெண் விடுதலை பற்றி
நண்பர்களுடன்
நயமாகப் பேசுகிறாய்!
சீதனக் கொடுமை பற்றி
மேதாவித் தனமாய்
மேடையில் விவாதிக்கிறாய்!
பெண்ணையும்
கண்ணாகப் பார்க்கும் படி
கதைகள் புனைகிறாய்!
கவிதைகள் வடிக்கிறாய்!
வீட்டிலே மட்டுமேன்
தாலி கட்டியவளை
வேலைக்காரி ஆக்குகிறாய்!
சீதனம் தரவில்லையென்று
வார்த்தையால் குத்துகிறாய்!
தாலி கட்டியவள்
உன் தாரம் மட்டுமல்ல
அவள் பூமியில் பிறந்ததே
உனக்கு சேவகம் செய்ய அல்ல
வாழ்க்கையின் ஆசைகள்
வசந்தத்தின் தேடல்கள்
நேசத்தைத் தேடும்
நெஞ்சுக்குள் ஏக்கங்கள்
கூடவே தன்னோடு
கூடாமல் கலைந்து...
உன்னோடு கூடவே
உனக்காகச் சிரிப்பவளும்
பெண் ஜென்மம் தானென்று
மறந்துதான் போனாயோ?
சந்திரவதனா
ஜேர்மனி
20.6.99