Tuesday, October 10, 2006

வழக்கம் போல் அடுப்படிக்குள்..!

எப்போதும் போலவே
இன்றைய எனது காலையும்
அவசரமாய்த்தான் விடிந்தது.

இப்போதெல்லாம்
இனிய கனவுகள் என்பது
எல்லோருக்கும் போல்
எனக்கும்
இரவுகளில் வருவதில்லை

வானிலே பறக்கும் விமானங்கள்
நேரிலே மோதுவதாய்
ஏதேதோ கனவுகள்
தீப் பிழம்புக் குவியலுக்குள்
நான் நின்று தவிப்பதாய்
திடுக்கிட்ட விழிப்புகள்

ஆனாலும்
விடியல்கள் வழமை போலத்தான்...

இன்று என்ன சமையல்
என்பதில் தொடங்கி
கூட்டல் கழுவல்
துடைத்தல் பெருக்கல்
எல்லாம் முடித்து....
வேலைக்கு ஓட வேண்டுமென்பதில்
மனசு பரபரத்தது.

இத்தனைக்கும் நடுவே...
"அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற நினைப்பை
கொழுத்தி எறிந்தவள் மாலதி...
"
பெண் பெருமை பாடியது வானொலி.

எனக்குள்
மின்னலாய் கோடிட்டது மகிழ்ச்சி
நானே
களத்தில் நிற்பது போன்ற திருப்தியுடன்
மாலதியின் நினைப்பை மனதில் இருத்தி
பத்திரிகையில் வந்த கவிதை படித்து
ஒரு மிடுக்கோடு நிமிர...

"என்னப்பா இண்டைக்குச் சாப்பாடு...?
பேப்பரும் கையுமா
நீ இருந்தால்...!
எனக்குப் பசிக்குது..."
கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்

அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல....

சந்திரவதனா
யேர்மனி.
10.10.2001

3 comments:

கவிப்ரியன் said...

பொறுப்பும் பொறுமையும் பெண்களின் தாய்மைக்குணங்கள்.
போராடும் குணமும் உண்டு அவளிடம்.
வாளேந்தி அவளே போருக்கு செல்லும் போதும் தன் கணவனுக்கும் பிள்ளைக்குமான உணவினை செய்து பரிமாறிவிட்டுத்தான் போவாள்.
அந்த தாய்மைக்குணத்தை வெளிப்படுத்துகிறது இந்த கவிதை... எனக்குள்ளும்....

நளாயினி said...

ஆண்மையும் பெண்மையும் கலந்தது தான் பெண், ஆண். ஆனால் என்ன பல ஆண்கள் தமக்குள் இருக்கும் பெண்மையை தொலைத்தவிடுகிறார்கள். அல்லது மறைத்து விடுகிறார்கள்.

தினேஷ் said...

நிஜம்...

தினேஷ்