
யாரும் எதையும்
மறந்து போவதில்லை
மறதிக் குவியலுக்குள்
புதைந்து கிடப்பதை
கிளறிப் பார்க்கத்தான்
விரும்புவதில்லை
சிலர்தான்
கிளறிக் கிளறி
கிளர்ந்தெழுகிறார்கள்
சிலரோ
உருகி உருகி
அழுது வடிக்கிறார்கள்
இன்னும் சிலரோ
பொருமிப் பொருமி
போரிடத் துணிகிறார்கள்
பெண்ணே..! நீ
கிளர்ந்தெழு
அழுவதை மறந்திடு
போரிடவும் துணிந்திடு
யாரும் ஏதும் சொல்வார்களேயென்று
நாணிக் கோணி வீணே நிற்காதே
திணிப்பதற்கென்றே திரிவார்கள்
குறை பிடிப்பதில்
கண்ணாய் இருப்பார்கள்
கணப் பொழுதில் உன் மனதை
கலைத்தும் விடுவார்கள்
தொலைக்காதே உன்னை
தொலைத்து விடு உன்
மனதைக் கலைப்பவரை
தொலைத்து விடு
பெண்ணென்று விழிப்பவர்களை
பூவென்று நுகர்பவர்களை
கண்ணென்று கதை பேசுபவர்களை
இன்னும் சொல்லி ஏய்ப்பவர்களை...
மார்ச் - 2000