Sunday, September 10, 2006

நான் ஒரு பெண்

வீணை என்று
சொல்லாதே என்னை
நீ மீட்டுகையில் நாத மிசைக்கவும்
மீட்டாதிருக்கையில் மௌனிக்கவும்
நான் ஒன்றும் ஜடமில்லை

கிளி மொழியாள் என்று
சொல்லாதே என்னை
நீ சொன்னதைச் சொல்லவும்
சொல்லாதிருக்கையில்
தனிமைச் சிறையில் வாடவும்
நான் ஒன்றும் பட்சி இல்லை

பூ என்று
சொல்லாதே என்னை
தேவைப்பட்டால் சூடவும்
வாடி விட்டால் எறியவும்
நான் ஒன்றும்
எந்த வண்டுக்குமாய்
இதழ் விரிக்கும் மலரில்லை

பாவை என்று
சொல்லாதே என்னை
நுள்ளியும் கிள்ளியும் நீ விளையாடவும்
அலுப்புத் தட்டினால் தள்ளி எறியவும்
நான் ஒன்றும்
வாய் பேசாப் பொம்மையில்லை

மீட்டத் தெரியாதவனிடம்
அகப்பட்ட வீணையாகவோ
பேசத் தெரியாதவன் வீட்டு
கூட்டுக் கிளியாகவோ
சூடி எறியும் பூவாகவோ
கிள்ளி விளையாடி
அள்ளி உறவாடி
பின் தள்ளி எறியும்
பாவைப் பிள்ளையாகவோ
எண்ணாதே என்னை

சொல்லாலும் செயலாலும்
அன்போடு தொடுகின்ற
மென் உறவுக்காய் ஏங்குகின்ற
உன் போல மனம் கொண்ட
பெண் என்று மட்டும்
எண்ணு என்னை
அது போதும் எனக்கு.

சந்திரவதனா
யேர்மனி
May - 2000


பிரசுரம் - ஈழமுரசு(4-10 மே - 2000)
ஒலிபரப்பு - ஐபிசி - நிலாமுற்றம்( 8.5.2000)
ஒலிபரப்பு - ஐபிசி - நங்கையர் நாழிகை (2001)

5 comments:

U.P.Tharsan said...

அருமையாக இருக்கிறது.

Chandravathanaa said...

நன்றி தர்சன்

தேவமகள் said...

, சொல்லாலும் செயலாலும்
அன்போடு தொடுகின்ற
மென் உறவுக்காய் ஏங்குகின்ற
உன் போல மனம் கொண்ட
பெண் என்று மட்டும்
எண்ணு என்னை
அது போதும் எனக்கு.
,
***
தோழி... இதையேதான் நானும் வலியுறுத்துகிறேன்...
வேறு வார்த்தைகளில்!
நம் ஏக்கங்களைச் சொல்லியல்ல
பலங்களைச் சொல்லி!

மனம் தொட்டது கவிதை!

Chandravathanaa said...

மிகவும் நன்றி உதயா

Chandravathanaa said...

நன்றி பிரேமா