Monday, October 02, 2006

நினைவுகள்

முற்றத்து நிலாவும்
முழு நீள விறாந்தையும்
"மூத்தக்கா" என்றழைக்கும்
என் அன்புத் தம்பியும்
மெத்தென என் மனதில்
மிருது நடை போடுகையில்
போரிலே என் தம்பி
பொருதி விட்ட நினைவு வந்து
கோரமாய் எனைத் தாக்கும்

தென்னை இளநீரும்
தேன் சுவை மாம்பழமும்
சின்ன வார்த்தைகளால் எனைச்
சீண்டி விடும் அண்ணாவும்
சில்லென என் நினைவை
சிலிர்க்க வைக்கும் அக்கணத்தில்
ஷெல்லிலே அவன் கால்கள்
சில்லான நினைவு வந்து
கொல்லாமல் எனைக் கொல்லும்

நீலக் கடலலையும்
நெடிதுயர்ந்த பனை மரமும்
பாசமுடன் எனை அணைக்கும்
நேசமிகு அம்மாவும்
ஈரமழை பொழிந்து என்
நெஞ்சை நனைக்கையிலே
வன்னி மண்ணில் அவள்
அகதியான நினைவு வந்து
கொடும் புயலாக எனை அலைக்கும்

சந்திரவதனா
ஜேர்மனி


ஒலிபரப்பு - ஐபிசி வானொலி நவம்பர்-1997
பிரசுரம் - ஈழநாடு-7-13 நவம்பர் 1997

5 comments:

ENNAR said...

விறாந்தை என்றால் என்ன?
நல்ல கவிதை

Jay said...

நோக வைத்தது உங்களை மட்டும் இல்லை அக்கா!
எங்களையும்தான்...

கைப்புள்ள said...

//விறாந்தை என்றால் என்ன?
நல்ல கவிதை//

நானும் இதையே தான் யோசித்தேன். அநேகமாக Verandah என்று நினைக்கிறேன்.

மேடம்,
தங்கள் கவிதை அருமை. பழைய நினைவுகளையும் தாங்கள் இழந்தவைகளையும் அழகாகப் வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்.

Chandravathanaa said...

என்னார்
கருத்துக்கு நன்றி
விறாந்தை என்பது கைப்பிள்ளை கூறிய Verandahதான்
சீமெந்து பூசிய நிலத்தைத்தான் எமது ஊரில் இப்படிச் சொல்வார்கள்.
சரியான தமிழ் தாழ்வாரம் என நினைக்கிறேன்.

மயூரேசன், கைப்புள்ள
நன்றி

sangeetha said...

this is great....i have tears in my eyes...i wish i can type in tamil...