Monday, September 04, 2006

இலவு காத்த கிளியாக...!

பனியது பெய்யும்
அழகினைக் கண்டு
மனமது துள்ளும்

வெளியினில் சென்றால்
பனியது பெய்யும்
குளிரது அறைய
உடலது நடுங்கும்
உதிரமும் உறையும்

பனியது பெய்யும்
குளிரது அறைய
பனியது பூவாய்
மரங்களில் தெரியும்

அழகினை ரசிக்க
அவகாசமின்றி
பணமது தேடி
வேலைக்காய் கால்கள்
பனியினில் விரையும்

"குளிரிலும் பனியிலும்
பணமது தேடி..........!
இது என்ன வாழ்க்கை"
மனம் தினம் அலுக்கும்

மடியினில் சுமந்த
மகவுடன் குலாவ
மணியின்றி
மனமது துவழும்

வெயிலதன் வரவில்
பனியது ஓடும்
மரமது துளிர்க்க
மனமது மலரும்
மலர்களும் சிரிக்கும்

மாறும் மாறும் ......!
எல்லாம் மாறும்!
பணமது தேடும்
நிலையது மாறும்!
ஓய்வாய் உட்கார்ந்து
கதைக்க முடியும்
ஒன்றாய் சேர்ந்து
உண்ண முடியும்
விரும்பிய மட்டும்
உறங்க முடியும்
குழந்தைகளுடனே
குலாவ முடியும்
குடும்பமாய் கூடி
களிக்க முடியும் ...!

முடியும் ...! முடியும்...!
பட்டியல் நீளும்!
...முடியும் ...! முடியும்..!
எல்லாம் முடியும்...!

இலவாய் நினைவுகள்
காய்த்துக் குலுங்க
கிளியாய் மனமும்
காத்து நிற்கும்.

சந்திரவதனா
யேர்மனி
1999

1 comment:

தென்னவன். said...

*
"குளிரிலும் பனியிலும்
பணமது தேடி..........!
இது என்ன வாழ்க்கை"
மனம் தினம் அலுக்கும் */

மிக மிக அருமை.

நீண்ட நாட்களுக்கு முன்பு நானும் கவிதை எழுதுகிறேன் என்று எழுதிய ஐக்கூ, உங்கள் தலைப்பு அதை எனக்கு நினைவூட்டியது

"இந்தக்கிளி காத்திருப்பது
இனிக்கும் பழத்திற்கா
இலவம் பஞ்சிற்கா!"


நன்றி
தென்னவன் இராமலிங்கம்.