Monday, September 04, 2006

விடுதலை வேண்டி.!

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களுக்கு
என் நாசித்துவாரமும்
பாதையாகிப் போனதில்
தொண்டைக்குழி வரை
மசமசத்தது

விடுப்புப் பார்ப்பதே
வேலையாக இருந்ததில்
விழிகளும் சிவந்தன

“அக்கா!
சித்திரைக்குப் பொங்கியாச்சே?”

பாதையில் ஒரு தமிழன்
பாசமாய் கேட்டான்

„...ம்ம்ம்...“
காலைப் பரபரப்பில்
பாணைக் கடிக்கவே
மறந்தேன் என்றால்
நம்புவானா...!

பாதி இரவில் விழித்திருந்து
ஊரில் வாழும் உறவுக்காய்
அழுதேன் என்றால்
நம்புவானா...!

கற்தரையில் எம்மவர்
நித்திரை கொள்வதை
ஊர்க்கடிதம்
சொன்னதில் தொடங்கி

இந்திய வல்லூறுகள்
எம்மவரை
உயிர் வதம் செய்வதில்
தொடர்ந்து

செம்மணிப் புதைகுழியில்
எம் பெண்மணிகள்
புதைந்தது வரை

துரையப்பா விளையாட்டரங்கிலும்
புதை குழிகள்
தொடர்வது வரை

சத்தியமாக நான்
சித்திரைக்கு
பொங்கவில்லை என்றால்
நம்புவானா...!

„ஓம் தம்பி பொங்கியாச்சு „

என் பொய்யில்
முகம் மலர்ந்து
முன்னேறிப் போறவனும்
மூக்கைத்தான் தேய்க்கிறான்
கண்களையும் கசக்குகிறான்

அழகிய மலர்களின்
நுண்ணிய மகரந்தக்களுக்கு
இவன் மூக்கும் பலிதானோ.....!

காற்றோடு கை கோர்த்து
ஊர்க்கோலம் போகின்ற
மகரந்தத் துகள்களிடமிருந்தாவது
அந்நிய மண்ணில்
அடைக்கலம் தேடும்
எங்கள்
மூக்குகளுக்கும் கண்களுக்கும்
விடுதலை வேண்டுமென
இயற்கையை வேண்டிநின்றேன்.

சந்திரவதனா
யேர்மனி

April-2000
பிரசுரம்- எரிமலை May-2000

No comments: