Tuesday, October 24, 2006

தொலைக்காதே உன்னை



யாரும் எதையும்
மறந்து போவதில்லை
மறதிக் குவியலுக்குள்
புதைந்து கிடப்பதை
கிளறிப் பார்க்கத்தான்
விரும்புவதில்லை

சிலர்தான்
கிளறிக் கிளறி
கிளர்ந்தெழுகிறார்கள்

சிலரோ
உருகி உருகி
அழுது வடிக்கிறார்கள்

இன்னும் சிலரோ
பொருமிப் பொருமி
போரிடத் துணிகிறார்கள்

பெண்ணே..! நீ
கிளர்ந்தெழு
அழுவதை மறந்திடு
போரிடவும் துணிந்திடு

யாரும் ஏதும் சொல்வார்களேயென்று
நாணிக் கோணி வீணே நிற்காதே

திணிப்பதற்கென்றே திரிவார்கள்
குறை பிடிப்பதில்
கண்ணாய் இருப்பார்கள்
கணப் பொழுதில் உன் மனதை
கலைத்தும் விடுவார்கள்

தொலைக்காதே உன்னை
தொலைத்து விடு உன்
மனதைக் கலைப்பவரை

தொலைத்து விடு
பெண்ணென்று விழிப்பவர்களை
பூவென்று நுகர்பவர்களை
கண்ணென்று கதை பேசுபவர்களை
இன்னும் சொல்லி ஏய்ப்பவர்களை...

மார்ச் - 2000

Saturday, October 14, 2006

நினைவிலே ஒரு தீபாவளி

செம்பருத்தி சிவந்திருக்க
ரோஜாக்கள் அழகு தர
வண்டுகள் ரீங்கரிக்க
மல்லிகை மணங்கமழ
தென்னோலை சரசரக்க
அணிலொன்று தொப்பென்று
முற்றத்தில் வீழ்ந்து
மாதுளையில் தாவி
மயாமாய் மறைந்தது

கொடிப்பூ போட்ட
கோடிச் சட்டையுடன்
தங்கை
கொலு போல இருந்தாள்
அசைந்தாலே
சட்டை நலுங்கிப் போகுமென்று
அசையாது இருந்தாள்
வெடி வேண்டுமென்று
தம்பி அடம் பிடித்தான்

பகட்டாகப் பட்டுடுத்திய
பக்கத்து வீட்டு மாமி
வீதியிலே பவனி வந்தாள்
மகன் வெளி நாட்டிலாம்

நரகாசுரனை வதம் செய்த கதை பற்றி
பாட்டி குட்டிப் பிரசங்கமே செய்தாள்
வெளியிலே போன அப்பா
பங்கிறைச்சியுடன் வந்தார்
அள்ளி முடித்த ஈரத்தலையுடன்
அம்மா அடுக்களையில் மாய்ந்தாள்

பால் குடித்த ஆட்டுக்குட்டி
பரவசமாய் துள்ளி வந்து
குரோட்டனில் ஒரு கடி கடித்து
மீண்டும் தாய்முலை வாய் பதித்து...

சின்னச் சின்னதாய்
நெஞ்சை நிறைத்த சந்தோசம்
அன்றைய தீபாவளியில்

இன்றைய தீபாவளியில்
அருகில் மாதுளையும் இல்லை
மரம் தாவும் அணிலும் இல்லை
குட்டிப் பிரசங்கம் செய்ய
பாட்டியும் இல்லை
பட்டாசும் இல்லை

எம்மவர் வதைபடும்
அவலக்கதை மட்டும்
சேதியாய் தினம் வரும்
அது கேட்டு மனம் கொதித்து
உடல் தகித்து
கண்ணீரைச் சொரிகையிலும்
கள்ளமாய் சில நினைவுகள்
உள்ளத்துள் ஒளிந்திருக்கும்
அன்றைய தீபாவளியும்
அதனோடு வெல்லமாய் இனித்திருக்கும்

சந்திரவதனா
7.10.1999

Tuesday, October 10, 2006

வழக்கம் போல் அடுப்படிக்குள்..!

எப்போதும் போலவே
இன்றைய எனது காலையும்
அவசரமாய்த்தான் விடிந்தது.

இப்போதெல்லாம்
இனிய கனவுகள் என்பது
எல்லோருக்கும் போல்
எனக்கும்
இரவுகளில் வருவதில்லை

வானிலே பறக்கும் விமானங்கள்
நேரிலே மோதுவதாய்
ஏதேதோ கனவுகள்
தீப் பிழம்புக் குவியலுக்குள்
நான் நின்று தவிப்பதாய்
திடுக்கிட்ட விழிப்புகள்

ஆனாலும்
விடியல்கள் வழமை போலத்தான்...

இன்று என்ன சமையல்
என்பதில் தொடங்கி
கூட்டல் கழுவல்
துடைத்தல் பெருக்கல்
எல்லாம் முடித்து....
வேலைக்கு ஓட வேண்டுமென்பதில்
மனசு பரபரத்தது.

இத்தனைக்கும் நடுவே...
"அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற நினைப்பை
கொழுத்தி எறிந்தவள் மாலதி...
"
பெண் பெருமை பாடியது வானொலி.

எனக்குள்
மின்னலாய் கோடிட்டது மகிழ்ச்சி
நானே
களத்தில் நிற்பது போன்ற திருப்தியுடன்
மாலதியின் நினைப்பை மனதில் இருத்தி
பத்திரிகையில் வந்த கவிதை படித்து
ஒரு மிடுக்கோடு நிமிர...

"என்னப்பா இண்டைக்குச் சாப்பாடு...?
பேப்பரும் கையுமா
நீ இருந்தால்...!
எனக்குப் பசிக்குது..."
கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்

அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல....

சந்திரவதனா
யேர்மனி.
10.10.2001

Monday, October 09, 2006

நிராகரிப்பு

1)
என் கண்களில்
அருவி பாய்ந்தது
நீ உன் காதலை
அவளிடம் தெளித்த போது.




2)
இரவு
பகலை விழுங்கியது
காதலை நிராகரித்த
உன் கடிதம்
என் சந்தோசத்தை
விழுங்கியது போல்.


3)
நெஞ்சில்
சுரீரென்று வலித்தது
உன் காதல் அம்பு
என் நண்பியைத்
துளைத்த போது.


சந்திரவதனா
5.9.1999

Thursday, October 05, 2006

கல்யாண சந்தை



இது ஒரு
வினோதமான சந்தை

எல்லாப் பொருட்களையும்
பணத்துக்காக விற்பார்கள்
இங்கு மட்டும்
பெண் என்ற
உயிர்ப் பொருள் ஒன்று
பணம் கொடுத்து
விற்கப் படும்.

சந்திரவதனா
ஜேர்மனி
2003

Wednesday, October 04, 2006

மனநோயாளி



நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி..!

உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.

திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்...
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு... நான்

அவை
வெடித்துச் சிதறி...
"மனநோயாளி" என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா..?
நடிப்புடனா..?

சந்திரவதனா
ஜேர்மனி
24.3.2002

http://www.selvakumaran.de/index2/kavithai/mananoyali.html

Monday, October 02, 2006

நினைவுகள்

முற்றத்து நிலாவும்
முழு நீள விறாந்தையும்
"மூத்தக்கா" என்றழைக்கும்
என் அன்புத் தம்பியும்
மெத்தென என் மனதில்
மிருது நடை போடுகையில்
போரிலே என் தம்பி
பொருதி விட்ட நினைவு வந்து
கோரமாய் எனைத் தாக்கும்

தென்னை இளநீரும்
தேன் சுவை மாம்பழமும்
சின்ன வார்த்தைகளால் எனைச்
சீண்டி விடும் அண்ணாவும்
சில்லென என் நினைவை
சிலிர்க்க வைக்கும் அக்கணத்தில்
ஷெல்லிலே அவன் கால்கள்
சில்லான நினைவு வந்து
கொல்லாமல் எனைக் கொல்லும்

நீலக் கடலலையும்
நெடிதுயர்ந்த பனை மரமும்
பாசமுடன் எனை அணைக்கும்
நேசமிகு அம்மாவும்
ஈரமழை பொழிந்து என்
நெஞ்சை நனைக்கையிலே
வன்னி மண்ணில் அவள்
அகதியான நினைவு வந்து
கொடும் புயலாக எனை அலைக்கும்

சந்திரவதனா
ஜேர்மனி


ஒலிபரப்பு - ஐபிசி வானொலி நவம்பர்-1997
பிரசுரம் - ஈழநாடு-7-13 நவம்பர் 1997

Thursday, September 28, 2006

அழகு..?

மனதை அசைத்து விட்டு
மௌனமாய் நின்றான்.

அழகு அவன்
விழிகளிலா..!
மொழி மறந்த இதழ்களிலா..!
அல்லது மௌனத்திலா..!

சிரிக்கக் கூடாதென உதட்டை
விரிக்காதிருந்தாலும்
விழிகளில் அது வழிந்தது.

பார்க்கக் கூடாதென விழிகளைச்
சுருக்கியிருந்தாலும்
கருமணிகள் கட்டுடைத்து
என் விழிகளோடு மோதின.

இவனோடு பேசாது போனால்
எனக்குப் பேசத் தெரிந்ததில்
என்ன பிரயோசனம்..!

"பெயர் என்ன? "

விழி விரித்து
இதழ் உடைத்து
மௌனம் கலைத்தான்.

பெயர் கூட அழகுதான்.
படமெடுக்க அனுமதிப்பானா?

அனுமதியின்றி...
அவசரமாய்...
குறை நினைப்பானா?

இப்போ...
மனத்திரையில் அவன் வந்து
மனதை அசைத்து விட்டு
மௌனமாய் நிற்கிறான்.

அழகு அவன்
விழிகளிலா..!
மொழிய மறந்த இதழ்களிலா..!
அல்லது மௌனத்திலா..!

சந்திரவதனா
October-2002

Saturday, September 23, 2006

பெண்ணே நீ இன்னும் பேதைதானே!


மஞ்சளில் தாலி கட்டி
வேலி என்பார்

மலரினைத் தலையில் வைத்து
மலரே என்பார்

சொல்லினை அம்பாய் எய்து
துடிக்காதே என்பார்

வேரினில் குத்தி விட்டு
வாடாதே என்பார்

கையினில் தீயைத் தந்து
தீயாதே என்பார்

கண்ணிலே கையை விட்டு
கலங்காதே என்பார்

புண்ணினைக் கிளறி விட்டு
புளுங்காதே என்பார்

மண்ணினைத் தாங்குவாள் போல்
பொறுமை கார் என்பார்

நுண்ணிய உணர்வுகள்
உனக்கேன் என்பார்

பெண்ணெனப் பிறந்ததற்காய்
இன்னும் . என்ன சொல்வார்

பேதைதானே நீ
பேசாதே என்பாரா?!

சந்திரவதனா
யேர்மனி
17.8.2000

Wednesday, September 20, 2006

நட்பென்றுதானே நம்பினேன்..!

போரிலும்
புலம் பெயர் வாழ்விலும்
வாழ்வின் வசந்தங்கள்
வாடி விட்ட
தனிமை பூத்த
ஒரு பொழுதில் தானே
உன் தொலைபேசி அழைப்பு
எனைத் தேடி வந்தது.

நட்பென்றுதானே நம்பினேன்
கை கோர்க்க எண்ணி
விரல் நீட்டினேன்

என் விரலை
சிறை வைத்து
பின் முறித்தெறிவதற்கான
முன்னேற்பாடுதான் அது என்று
முற் கூட்டியே நீ
சொல்ல மறந்ததேன்..?

சந்திரவதனா
யேர்மனி
2002